Skip to main content

எழுச்சிப் பயணமும் படுகொலையும்; இம்மானுவேல் சேகரன் குறித்து பொன்வண்ணன் பதிவு!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Actor Ponnvannan shared about emanvelu shekaran


இம்மானுவேல் சேகரினின் நினைவு நாளை தொடர்ந்து அவரை நினைவு கூறும் வகையில் நடிகர் பொன்வண்ணன் அவரது முகநூல் பக்கத்தில் இம்மானுவேல் சேகரன் குறித்து பதிவு செய்துள்ளார். அதில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 09.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.


அவருடைய 18 ஆவது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் மீது கொண்ட பற்றினால் இம்மானுவேல் சேகரன் 1945 -இல் இராணுவத்தில் இணைந்தார். 


பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.

 

29.12.1946 அன்று அண்ணல் அம்பேத்கர் மதுரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிகழ்த்திய உரை இவரது வாழ்க்கயையே மாற்றியது…! இராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை 1952 இல் துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 


1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, அதன்மூலமாக அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மருமணம், ஆகிய 7 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.


மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்குச் சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டாமைக்கு எதிராக ஊர்கள் தோறும் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.


இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்... அதனது தொடர்ச்சியாக செப்டம்பர் 11 அன்று இதேநாளில் - பள்ளியில் நடந்த பாரதியார் நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்டு இரவு 9 மணி அளவில் வீட்டிக்குச் சென்ற அவரை - திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்புகிறது.

 

Ad

 

ஒரு சமூகப் போராளியின் எழுச்சிப் பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-09-1957 இல் ராமநாதபுர மாவட்டத்தின் சட்டம் ஓழுங்கைச் சீர்குலைத்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.

 

33 வயதேயான தியாகி இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை கொள்கையும் இன்றும் சமூகத்திற்கு தேவையாக இருக்கிறது…! எனது ஓவியங்கள் வழியாக அவரை நினைவு கொள்வதில் பெருமை கொள்கிறேன்…! என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்