ACTOR PANDU PASSED AWAY AT CHENNAI HOSPITAL

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.

Advertisment

மறைந்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் தம்பியான நடிகர் பாண்டு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘சின்னதம்பி’, ‘காதல் கோட்டை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாண்டுவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. திறமைமிக்க ஓவியரான நடிகர் பாண்டு, பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்தவர். அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டுவின் மனைவி குமுதாவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

நடிகர் பாண்டுவின்மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் விவேக், இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போதுநடிகர் பாண்டுவின் மறைவும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.