ADVERTISEMENT

நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

05:03 PM Apr 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் மரணத்துக்கு காரணம் என்று சிலர் சந்தேகம் எழுப்ப, அவர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கியிருந்தார்கள். இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதன்படி கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில், வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் 19.04.2021 தேதியன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில், முன் ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் E.ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை எனக் கூறி, புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT