Skip to main content

“கொடுத்தால் இரட்டை இலை; இல்லையென்றால் வாழை இலை” - நடிகர் மன்சூர் அலிகான்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Actor Mansoor Ali Khan has spoken about AIADMK in parliamentary elections

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார் இதற்கு முன்பு ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறினார். தற்பொழுது வேலூர் தொகுதி என்கிறார். இதற்காக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வ உ சி நகரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கு கடைகளில் சென்று அமர்ந்து குழந்தைகளை கொஞ்சியும் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டினார்

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் உங்களை நீக்கியதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பாலமுருகன் என்பவர் தான் பொதுச்செயலாளர் என்னை நீக்கியவர் கிடையாது. காசு வாங்கிக்கொண்டு ஏதோ பண்ணி என்னை நீக்கியுள்ளார். இது நான் ஆரம்பித்த கட்சி இது இந்தியா முழுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எலெக்சன் கமிஷன் அப்ரூவலில் பாலமுருகன் என போட்டு உள்ளது” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, “அவர்களிடம் போய் பேசி விட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான்  இங்கே வேலூரில் நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது; ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. அவர்களை குறை சொல்லக்கூடாது அது அம்மாவோட கட்சி; தாய் கழகம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள் இது திப்புவின் வாள்” என்றார்.

ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, “அது இப்போது இயலாது பொருளாதார வசதி இல்லை. கூட்டணி தருவார்கள் என்று பார்த்தேன் தரவில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏதும் பேசவில்லை அவர் இறந்த பிறகு அதோடு சென்றுவிட்டது. பிரதமர் மோடி, ஜெயலலிதா அம்மாவை பாராட்டினார். அவரே தான் போட்டுத் தள்ளினார். அவரே தான் தீர்த்துக் கட்டினார் அந்த சரித்திரம் மக்களுக்கு தெரியும்.

இந்த தேர்தலை பாரதப் பிரதமர் திருவிழா என்று கூறியுள்ளார். அவர் ஏற்கனவே முடித்து விட்டார். தேர்தல் திருவிழாவில் நான் பபூன் அல்ல, அவரே பபூன் ஆக நடிக்கிறார். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் ஈடி வந்துவிடும்; அந்த பயம் நமக்கு  இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம்” என்றார்.

மேலும், டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாட்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா. வென்றால் வேலூர் கோட்டை, இல்லை என்றால் டெல்லி செங்கோட்டை ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாக இருப்பேன், ஒற்றை ஆளாக இருந்தாலும் ஒரப்பாக(காரம்) இருப்பேன். தத்திகள் மாறி நான் இருக்க மாட்டேன்” என்று  மன்சூர் அலிகான் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

நில மோசடி புகார்; விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Vijayabaskar bail plea adjourned again

கரூரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 2-வது முறையாக இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்தப் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். 

Vijayabaskar bail plea adjourned again

இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 15ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வருகின்ற 21ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 2வது முறையாக ஒத்தி வைத்துள்ளார்.