போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அவரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் நடிகர் கிருஷ்ணா நேற்று முன்தினம் (25.06.2025) 2 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதோடு அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இருப்பினும் அவரது வீட்டில் எந்தவிதமான ஆவணங்களும், போதைப்பொருளும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் வாட்ஸ் அப் சாட் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட ‘கோட் வேர்ட்’ மூலம் நண்பர்களுக்குள் பேசி கொண்டது தொடர்பான மெசேஜ்கள் அழிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதோடு சென்னையைச் சேர்ந்த கெவின் என்ற நபரிடம் வாட்ஸ் அப்பில் உரையாடல் செய்ததாகவும், அதில் சில கோட் வேர்டுகளை பயன்படுத்திப் பேசியதாகவும் கூறப்பட்டது. அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வாட்ஸ்அப் உரையாடல்களைக் கிருஷ்ணா அழித்திருக்கிறார். அவற்றை மீண்டும் மீட்டெடுத்து போலீசார் சோதனை செய்ததில் நடிகர் கிருஷ்ணா தொடர்ச்சியாக கெவின் என்ற நபரிடம் போதைப்பொருளை வாங்கியதை காவல்துறையினர் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில்  கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் கெவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் கெவின் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் எழும்பூர் பகுதியில் உள்ள நீதிபதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் முன்னிலையில் நேற்று (26.07.2025) இரவு ஆஜர்ப்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரையும் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி (10.07.2025) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (27.06.2025) மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தனக்கும் இந்த வழக்குக்கும் எந்ததொடர்பும் இல்லை. தன்னை காவல்துறை தவறாக கைது செய்துள்ளது. தான் போதை பொருள்பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கு தொடர்புடைய எந்த போதை பொருளும் தன்னிடமிருந்து காவல்துறை கைப்பற்றவில்லை. நான் போதை பொருளை பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் இருந்து கைது செய்யப்பட்ட பிரசாந்த் உள்ளிட்ட யாரிடமும் எனக்கு எவ்வித தொடர்பும்  கிடையாது. அதே போன்று நடிகர் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை.

Advertisment

இந்த வழக்கு உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மை காலமாக எனக்கும் கெவின் என்பதற்கு எந்த தொடர்பும் கிடையாது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு எந்த நட்பும் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது வாட்ஸ்அப் குரூப்பில் நான் வெளியேறி விட்டேன். பழைய வாட்ஸ்அப் குரூப்பை வைத்து என் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே எனக்கு நீதிமன்ற விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் தயாராக இருக்கிறேன். ஆகையால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.