
சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாயம் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்குக் கால் வலி காரணமாக சிகிச்சைக்காக இன்று (11.02,2025) காலை 10 மணியளவில் நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லாததால் மூதாட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்காக அவரை வேறு மருத்துவமனைக்குப் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். காலை 7 மணி முதல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நடிகர் கஞ்சா கருப்புடன் இனைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகக் கஞ்சா கருப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசு மருத்துவர்கள் 2.5 லட்சம் ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மருத்துவர்கள் தனியாக கிளினிக் அமைத்துக் கொண்டு அங்குச் சிகிச்சை அளிக்கின்றனர். அதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது பற்றி மருத்துவத் துறை அமைச்சர் பேச வேண்டுமா?. இல்லையா?. இன்றைக்கு அதற்காகப் போராட்டம் செய்யப் போகிறோம். வெறி நாய் கடித்து ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து மாணவர்கள் ஒருவர் அமர்ந்துள்ளார்” எனக் கடுமையாகக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.