மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி வகித்து வந்தவர் சுந்தரேசன். இவர் தனது அரசு வாகனம் காவல் துறையால் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திரும்பப் பெற்றதாகக் கூறி கடந்த 17ஆம் தேதி (17.07.2025) காலை தனது வீட்டிலிருந்து அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதே சமயம் இந்த விவகாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையோ டி.எஸ்.பி.யின் வாகனம் பழுது காரணமாகச் சரி செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, மாற்று வாகனம் வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்திருந்தது.
இதனையடுத்து டி.எஸ்.பி. சுந்தரேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கிற அனைத்து காவலர்கள், அதிகாரிகள் எல்லாருக்கும் தெரியும். இங்கே என்ன கொடுமை நடந்துகிட்டு இருக்கிறது என்று. இதற்குக் காரணம் ஒருவர் எஸ்.பி. ஸ்டாலின், இன்னொருவர் ஆய்வாளர் ஸ்பெஷல் பிரான்ச் பாலசந்தர். எஸ்.பி.யை கூட ஒரு அதிகாரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலசந்தர் என்னை மட்டும் இல்லை பல அதிகாரிகளைத் துன்புறுத்துகிறார். வேலை செய்யவிடாமல் செய்கிறார். இந்த மாதிரி பிரச்சனை செய்கிறார்” எனப் பேசியிருந்தார். இவரது பேச்சு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இத்தகைய சூழலில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு ஆதரவாகச் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணி புரிந்த காண்ஸ்டபிள் செல்வம் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கிண்டி காவல் நிலைய கான்ஸ்டபிள் செல்வம் பேசுகிறேன். 1997இல் காவல்துறையில் இணைந்தேன். கடந்த 28 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆண்டு வரைக்கும் டி.எஸ்..பி சுந்தரேசன் ஜே 5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார். அப்போது அவரிடம் நான் ஓட்டுநராக பணியாற்றினேன். இதுவரை 12 ஆய்வாளருக்கு ஓட்டுநராக இருந்துள்ளேன்.
அவர்களில் வித்தியாசமானவர் நேர்மையானவர் உண்மையானவர் அப்படிச் சொல்லப்படுவர் ஆய்வாளர் சுந்தரேசன் தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் காவல்துறையில் உண்மையானவர்கள் கிடைப்பது பெரிய விஷயம். உணவகத்தில் சாப்பாடு வாங்கும் போது கூட காசு கொடுத்துத் தான் வாங்கி வரச் சொல்வார். அதுமட்டுமல்லாமல் உனக்கு வேண்டியதை நீ வாங்கி சாப்பிடு என்றும் கூறுவார். சொந்த காசவை தான் செலவு செய்வார். அவர் கையூட்டு பெறுவது கிடையவே கிடையாது. அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார். உண்மையாக இருப்பதால் கொஞ்சம் கோவமாகப் பேசுவார். சிங்கம் என்றாலே என்றைக்கும் சீற்றம் இருக்கத்தானே செய்யும். உண்மையிலேயே நான் அவரோடு பணியில் இருந்திருந்தால் அவருக்குச் சாதகமாகத் தான் பேசியிருப்பேன். அவர் தனியாகச் சொல்வதால் பொய் ஆகாது. உண்மைதான் சொல்வார்.
உண்மையாகத்தான் இருப்பார். அவர் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் யாரும் செய்யாத சாதனை அவர் செய்துள்ளார். அவரை இந்த அரசு கவனிக்காத விட்டாலும் பரவாயில்லை கடவுள் கண்டிப்பாக அவர் பக்கம் இருப்பார். அவர் உண்மை ஜெயிக்கும்... அவர் வென்று வருவார்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் செல்வம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைச் சென்னை காவல் துறை பிறப்பித்துள்ளது. அதே சமயம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.