Action taken against police inspector who investigated for Tanjore incident

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

Advertisment

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா, ஐஸ்வர்யாவை அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக, பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.