பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால், 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்,அதன் தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு, 2007-ம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு 2009-ம் ஆண்டு விதிகளை வகுத்தது. இருப்பினும், இந்தசட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.
மகன்களால் பராமரிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகார்களைப் பெற, மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இந்தசட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படிபெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் புகார் அளித்தால், 6 வார காலத்திற்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு வழக்கைமுடித்துவைத்தது.