Skip to main content

“மீன்பிடிப் படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Action should be taken to cancel the fine imposed on the fishing boat Chief Minister

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள், IND-TN-12-MM-6376 என்ற பதிவு எண் கொண்ட 'ஹோலி ஸ்பிரிட்' என்ற படகில் கடந்த 22-10-2023 அன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது  மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல் படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையினை ரத்து செய்திடவும், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.11.2023) கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "மாலத் தீவு கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகின் ஓட்டுநருக்கு, கடந்த 1.11.2023 அன்று, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், மாலத்தீவின் பணமதிப்பில் 42,00,000, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராதத் தொகையை செலுத்த வேண்டும். அதுவரை, அந்த மீன்பிடிப் படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத் தீவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும். மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதத் தொகை மிக அதிகமானதோடு மட்டுமின்றி அவர்களது சக்திக்கும் அப்பாற்பட்டது. இது அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும். இந்தப் பிரச்சினையில், மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  உடனடியாகத் தலையிட்டு மீன்பிடிப் படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கை, கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த மீனவர்களுக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என தான் நம்புகிறேன்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்