'Action if private schools give holidays'- Directorate of Matriculation Warning!

விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேசன் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13- ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (17/07/2022) காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. கல்வீச்சில் காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 16- க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர்.

Advertisment

ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களை எச்சரித்தனர். மேலும், காவல்துறையின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிரடிப்படையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10- க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி முழுவதும் 1000- க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பள்ளிக்குள் சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, நாளை (18/07/2022) முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.