Skip to main content

ஊரடங்கு முடிந்ததும் பழனி முருகன் கோவிலில் நடைமுறைக்கு வரும் அதிரடி கட்டுப்பாடு! 

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

palani  temple

 

பழனி மலைக்கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீறி செல்போன் கொண்டு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் பிரசித்தி பெற்ற ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை அரியவகை நவபாஷாணத்தில் போகரால் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

 

தற்போது ஊரடங்கு நீட்டிக்கபட்டு இருந்தாலும் மூலவருக்கு தினசரி ஆறு கால பூஜைகள் நடை பெறுகின்றன. தற்போது மலைக்கோவிலில் செல்போன் மற்றும் கேமராக்கள் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனினும் ஆர்வமிகுதியால் முருக பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம்பிடித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஆகிய சமூக வலைதளங்களில் விடுகின்றனர். இது ஆகம விதிகளுக்கு முரணாகவும், பாதுகாப்பு காரணங்களை மீறியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கோயிலுக்கு செல்போன் கொண்டு வருவதை தடுக்க அதற்கு கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்படி அடிவாரம் மற்றும் மலைக்கோவில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்கள் வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கப்படும் முறையை நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிவாரம் கீழே ஒரு கட்டணமும், மலை மீது மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாளடைவில் கோவிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதுகூட தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் செல்போன் கொண்டு வரும் முருக பக்தர்களுக்கு  கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டம் கரோனா ஊரடங்கு முடிந்தபின் நடை முறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.