
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய்தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டுவருவதற்கு முன்புள்ள, 45 சதவீத கட்டிடங்களைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவண்ணம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின் படி இந்த அனைத்து வசதி பணிகளும் 2022 ஜூன் 15ம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.