Advertisment

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்காக நடவடிக்கையா? – பணி நீக்கத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

Highcourt chennai

Advertisment

ஆண் காவலரும் பெண் காவலரும் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற காரணத்திற்காக, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து, காவலரின் பணி நீக்கத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த சரவணபாபு என்பவர், காவல்துறை ஒதுக்கீடு செய்த குடியிருப்பில் பணி வரைமுறைகளை மீறி, சக பெண் காவலருடன் தவறான கண்ணோட்டத்தோடு இருந்ததாக, ஆயுதப்பிரிவு ஐ.ஜி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சரவணபாபு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். சரவணபாபு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘தோழியைப் பார்க்க வந்த பெண் காவலர், அவர் இல்லாததால், பக்கத்து வீட்டில்சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றாரா எனக் கேட்கவே சரவணபாபு வீட்டிற்குள் வந்துள்ளார். அந்த நேரத்தில், யாரோ வெளியில் கதவைச் சாத்திவிட்ட நிலையில், அதிகாரிகள் வந்தபோது, மனுதாரர் நடந்ததைக் கூறியும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என வாதிட்டார்.

Advertisment

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மனுதாரர் சமர்ப்பிக்கும் கருத்தையே காவல்துறையின் சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் காவலரும், காவலர் சரவணபாபுவும் தவறான நோக்கோடுதான் வீட்டிற்குள் இருந்தார்கள் என்பதற்கு எந்தசாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. ஆண் காவலரும், பெண் காவலரும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் தவறான நோக்கம் கொண்டிருந்தார்கள் என்ற கற்பிதங்களை ஏற்க முடியாது’ எனத் தெரிவித்த நீதிபதி, சரவணபாபுவை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ததோடு, பணிபலன்கள் பெற அவர் தகுதியானவர் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

highcourt police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe