ADVERTISEMENT

9 ஆண்டுகளாக தண்ணி காட்டிய குற்றவாளி; ஆந்திராவில் வைத்து தூக்கிய தமிழக போலீஸ் 

05:25 PM Nov 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாநகராட்சியில் உள்ள புதுப்பேட்டை கான்வென்ட் தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார் 49 வயது அருளரசு. இவருக்கும் தேவனாம்பட்டினம் போட் மேன் தெருவை சேர்ந்த 38 வயது கணேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தனது ஹோட்டலில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு காரில் ஏறி புறப்பட்ட அருளரசை கணேஷ் வழிமறித்துள்ளார்.

ஏற்கனவே கணேஷ் மீது காவல் நிலையத்தில் அருளரசு கொடுத்திருந்த புகாரை வாபஸ் வாங்குமாறு கணேஷ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும், வழக்கை வாபஸ் வாங்க அருளரசு மறுத்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியால் அருளரசை சரமாரியாக குத்தினார் சம்படத்திலேயே அருளரசு உயிரிழந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக, கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மூலம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த கணேஷ், அதன் பிறகு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கணேசை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் இருக்கும் இடம் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் கணேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் இதனை நம்பாமல் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களின் முடிக்கமுடியாமல் இருக்கக்கூடிய வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு கூட்டம் ஒன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அருளரசை கொலை செய்த குற்றவாளி கணேஷ் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஆறு மாதமாக கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கணேஷ் புவனகிரி பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக புவனகிரி சென்ற போலீசார், அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது செல்போன் எண்ணையும் போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கணேஷ் ஆந்திர மாநிலம் நகரியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆந்திரா விரைந்த போலீசார், கணேஷ் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கடலூருக்கு அழைத்து வந்துள்ளனர். ஜாமீன் பெற்று நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 9 ஆண்டுகளாக கொலை வழக்கில் காவல்துறைக்கு தண்ணி காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் ரகசியமான முறையில் கைது செய்துள்ள சம்பவம், கடலூர் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT