
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 29.09.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து வாச்சாத்தி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரிகள் எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகிய இருபதுக்கு மேற்பட்டவர்கள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் வரும் ஆறு வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாலாஜி சரணடைந்தார். சரணடைந்த அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி மோனிகா உத்தரவிட்டுள்ளார்.