Accused arrested in Kovilpatti auto woman case

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஆட்டோ டிரைவர் சண்முகராஜ். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஜமீன் தேவர் குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளைத்துரைச்சி(30) என்பவரை ஆட்டோவில் சவாரியாக ஏற்றிக்கொண்டு காளாம்பட்டி கிராம சாலையில் சென்று கொண்டிருந்தார். திடீரென காளம்பட்டி ரோட்டில் மர்ம நபர்களால் ஆட்டோ வழிமறிக்கப்பட்டு ஆட்டோ டிரைவர் சண்முகராஜை அக்கும்பல் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று சரமாரியாக வெட்டியது.‌ இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சண்முகராஜை இறந்துவிட்டதாக நினைத்த அக்கும்பல் அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்து வந்தது. மேலும் கொலைக்கு சாட்சியாக வெள்ளை துரைச்சி இருக்கிறாரே என நினைத்து அவரையும் அக்கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது.

இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் வைத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், எஸ்.ஐ. சண்முகம், காவலர்கள் கழகாசல மூர்த்தி, கார்த்திக் ராஜா, ரமேஷ், சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை புதிதாக அமைத்து வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜ், சவாரி வந்த வெள்ளை துரைச்சி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்தன.

Accused arrested in Kovilpatti auto woman case

வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் சொந்த ஊர் திரும்பிய சண்முகராஜ் புதிதாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். சிறிது நாட்களிலேயே ஆட்டோ ஸ்டாண்டில் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனால் சண்முகராஜூவுக்கும், வானரமுட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கணேசனுக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத் தலைவர் பதவி தொடர்பாகவும், சங்க உறுப்பினராக சேர்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்தது தொடர்பாகவும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஸ்டாண்டுக்கு புதிதாக வந்த சண்முகராஜ் கையில் வெளிநாட்டில் சம்பாதித்த பணம் சரளமாக புழங்கியதால் அந்த ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள மற்றவர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இதனால் கோபாம் அடைந்த கணேசன், ஆட்டோ ஸ்டாண்டில் சீனியராக இருந்த தனக்கு தொல்லை கொடுத்த சண்முகராஜை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Advertisment

2023 ஏப்ரல் 9ஆம் தேதி இரவு சம்பவத்தன்று சண்முகராஜை நோட்டமிட்டு பின் தொடர்ந்த கணேசன், காளாம்பட்டி ரோட்டில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருந்த சண்முகராஜை வழிமறித்து தனது தம்பி ராஜா, உறவினர்கள் வேல் சங்கிலி பாண்டி, வெள்ளை சங்கிலி பாண்டி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து முகமூடி அணிந்து வந்து குடிபோதையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், தலையில் பலத்த வெட்டு காயம் விழுந்ததில் நிலைகுலைந்து ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜ் கீழே சரிந்து விழுந்துள்ளார். அவர் செத்து விட்டதாக கருதி அவரை விட்டு விட்டு, அங்கிருந்து நகர்ந்த அந்த கொலை கும்பல் அந்த ஆட்டோவில் பயணித்த வெள்ளை துரைச்சி இந்த கொலை சம்பவம் குறித்து போலீசிடம் சாட்சியளிப்பார் என நினைத்து அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கணேசன், அவரது தம்பி 32 வயதான ராஜா, உறவினர்கள் 29 வயதான வேல் சங்கிலி பாண்டி, 55 வயதான வெள்ளை சங்கிலி பாண்டி ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Accused arrested in Kovilpatti auto woman case

இரண்டு ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இது தொடர்பாக எஸ் பி ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொலை சம்பவத்தை பொருத்தவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. தடயவியல் ஆதாரங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மட்டுமின்றி மக்களுடன் ஊடுருவி வேறு சில பார்முலாக்களை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை ஸ்பெஷல் டீம் மூலம் பிடித்து கைது செய்துள்ளோம்”என்றார்.

இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி தற்போது ஆட்டோ ஓட்டி வரும் சண்முகராஜிடம், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் காண்பித்த போது சண்முகராஜ் மிரட்சி அடைந்து திடீரென மயங்கி சரிந்துள்ளார். போலீசார் அவரை தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி விசாரித்த போது, கைதான நான்கு பேரில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கணேசன், நேற்று வரை ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் உடன் நெருங்கிப் பழகி ஒன்றாக மதுவும் அருந்தி அவ்வப்போது நலம் விசாரித்து அவரது நலம் விரும்பியாக இருந்து நாடகமாடி நடித்து வந்துள்ளார் என தெரிய வந்தது. இந்த தகவல் துப்பு துலக்கிய போலீஸ் வட்டாரத்தையும் கிறுகிறுக்க வைத்துள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி