/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3403.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 3 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உடல் சிதைந்து உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த பழையபாளையம் பகுதியினைச் சேர்ந்தவர் சண்முகானந்தம் மகன் கந்தசாமி(67). இவர் ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர். இவர் புதன்கிழமை தனது மனைவி மங்கையர்கரசி(66), பேத்திகள் ரஞ்சனா(20), பூஜாஸ்ரீ(20) மற்றும் பேரன் பிரத்யூன்(7) ஆகியோருடன் தனது காரில் திருச்சியில் உள்ள நவல்பட்டு அண்ணாநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவந்தாம்பட்டி பிரிவு அருகே சென்ற போது திடீரென கந்தசாமியின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசைக்கு சென்று திருச்சியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதேநேரம் திருநெல்வேலி நோக்கி சென்ற காரின் பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் கந்தசாமி உடன் பயணித்த மங்கையர்கரசி, பேத்திகள் ரஞ்சனா, பூஜாஸ்ரீ ஆகியோர் நிகழ்விடத்திலும், எதிர்த்திசையில் சென்ற காரில் பயணித்த ராமகிருஷ்ணன் மனைவி பத்மா(61) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.
கந்தசாமி மற்றும் அவரது பேரன் பிரத்யூன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில்மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்த்திசையில் பயணித்த திருச்சி சுந்தர குளதாஸ் தெருவைச் சேர்ந்த கல்கி வரதராஜலு மகன் ராமகிருஷ்ணன்(65), கோப்பு பகுதியினைச் சேர்ந்த அப்பாவு மகன் மோகன்(45) ஆகியோர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குசென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை காரிலிருந்து மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதில் பத்மாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியிலிருந்து திருநெல்வேலி சங்கராபுரம் நோக்கி சென்ற மூன்றாவதாக விபத்துக்குள்ளான காரில் பயணித்த மின்வாரிய ஊழியர் ராஜ்குமார்(49) மற்றும் அவரது குடும்பத்தினர் காயமின்றி தப்பித்தனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)