/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4404.jpg)
தூத்துக்குடியில் இருந்து கடலூர் சாத்தான் குப்பம் நோக்கி சுமார் 500 உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை அர்ஜுன் என்பவர் ஓட்டிவந்தார். லாரி திருச்சி சஞ்சீவி நகர் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது, தனது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்குடையில் மோதியதில் நிழற்குடையைநொறுக்கியது. மேலும் அதன் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில், உர மூட்டைகளுடன் லாரி தனது பக்கவாட்டில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இந்த சம்பவத்தின் போது பேருந்து நிழற்குடையில் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். இதில், இருவர் தப்பி ஓடிவிட ஒரு நபர் மட்டும் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டனர். பிறகு சரிந்து விழுந்திருந்த உர மூட்டைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது, உர மூட்டைகளின் அடியில் 50 வயது மதிக்கத்தக்க நபரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
உர மூட்டைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் திருச்சி மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் முருகேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். பணி முடித்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட முருகேசனின் உடல் தற்போது உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)