accident in Trichy apartment

திருச்சி மன்னார்புரம் வீட்டு வசதி குடியிருப்பு அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஒரு வீட்டில் திருமண விழா முடிந்ததையடுத்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது. இதற்காக வீட்டின் சமையலறையிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர் மற்றும் அடுப்புகளைக் கொண்டு சமையல் பணி நடந்துள்ளது.

திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் பகுதியில் தீப்பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட உதவி அலுவலரும், கன்டோன்மென்ட் நிலைய அலுவலருமான ப. சத்தியவர்த்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பற்றியெரிந்த தீயை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தி அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். விருந்து, விழா உள்ளிட்டவைகளுக்கு வீட்டுக்கு வெளியே வைத்து சமைக்காமல், வீட்டின் சிறிய சமையலறை பகுதியிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்களைக் கொண்டு சமையல் செய்ததால், வெப்பம் தாளாமல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.