
தூத்துக்குடியில் நடப்பட்டு 13 நாட்களிலேயே சாய்ந்த மின் மின்கம்பத்தால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்-இலக்கியா தம்பதி. இவர்களுக்கு ஜெனிமித்ரா ராணி (5 )என்ற மகள் உள்ளார். குழந்தை ஜெனிமித்ரா, தாய் இலக்கியாவின் ஊரான தென்காசியில் உள்ள கடங்கநேரியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி எல்.கே.ஜி பயின்று வந்துள்ளார். தற்பொழுது தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அந்தப் பகுதியின் வயல்வெளியில் நடப்பட்டு 13 நாட்களே ஆன மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது.
வயலை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள முருகன் என்பவர் வீட்டில் அறுந்த மின்கம்பிகள் உரசியுள்ளது. முருகனின் வீட்டருகே ஜெனிமித்ரா மற்றும் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரும்பு மின் கம்பத்தை ஜெனிமித்ரா தொட்ட பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.