
தர்மபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் சின்ன முறுக்கம்பட்டி கிராமத்தில் வெடிபொருள் தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வெடி பொருள் தயாரிக்கும் கிடங்கில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இன்று மதியம் சுமார் 3 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியது.
இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவலறிந்து உடனடியாக அரூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அதிகப்படியான மக்கள் குவிந்துள்ளனர். உயிரிழந்த பெண்கள் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.