Accident in ECR Road four passes away

கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதும், சாலையை மறைத்து சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அடைத்து நிற்பதுமேசாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென்றுள்ளனர். இந்த கார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும் போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச்சென்ற கார் சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், சீமைக்கருவேல மரங்கள் சாலையில் மறைத்து நின்றதால் இந்த விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இப்படி வளரும் புதர்களை அகற்றாமல் விட்டதால் தான் பாலம் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி 4 உயிர்கள் பலியாகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.