Advertisment

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மாதம் ஊருக்கு திரும்பினார். அப்பொழுது அவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். சங்கராபுரம் வட்டம் செம்படா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த வியாழக்கிழமை 12 -9 -2019 அன்று திருமணம் செய்து வைத்தனர்.

accident

இந்நிலையில் பிரியதர்ஷினி அண்ணன் சந்தோஷ், பாலமுருகனையும் பிரியதர்ஷினியையும் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சந்தோஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் பிரியதர்ஷினி நடு ரோட்டில் கீழே விழுந்தார்.

Advertisment

அந்த சமயம் பைத்துந்துறையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவரின் தலையின் மீது ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிதாக திருமணமான புதுப்பெண் பிரியதர்ஷினி தனது கணவரின் கண்ணெதிரே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.