Accepting minister commitment burden workers returned to work

Advertisment

ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமைப் பணித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணியைப் புறக்கணித்து, ஈரோடு பார்க் ரோட்டில் அவர்கள் தினமும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.100 கோடிமதிப்பிலான பொருள்களின் பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும், பொது நபராக ஒரு வக்கீலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலையில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அமைச்சர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், ஏற்கனவே முடிவு செய்தபடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் இரவு சுமார் 9.30 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இதற்கிடையில், இருதரப்பினரையும் போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், தான் ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்றும், அதுவரை சுமைப்பணித்தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத்திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisment

இதையடுத்து, அவரது கருத்துக்கு இணங்கசுமைப் பணித் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு இன்று காலை முதல் பணிக்குத்திரும்பினர். இதனால் 8 நாட்களாக நீடித்து வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வழக்கம்போல் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று பார்சல்களை லாரிகளில் ஏற்றி அவை வெளி மாநிலம், வெளி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.