திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் தனிப்படைஅமைத்து மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டைத்தடுக்க பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை நாவலூர் குட்டப்பட்டு அருகிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக சாலை சந்திப்பு அருகில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் மதன் என்கிற மதுபாலன் (29) என்பது தெரிய வந்தது. மேலும், அந்த வண்டியில் அவர் கொண்டு வந்த பார்சலை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட21 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் இவர் மீது ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும்அவரை 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டுள்ள மதன், திருச்சியில் உள்ள ஓர் உயர் காவல்துறை அதிகாரிக்கு அவர் ஆய்வாளராக இருந்ததிலிருந்தே மாதம் தவறாமல் லஞ்சம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.