Skip to main content

“காவிரி டெல்டாவில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கருக துவங்கியுள்ளது”  பி.ஆர்.பாண்டியன்

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

"About 18 lakh acres of samba and crops have started to germinate in the Cauvery Delta" BR Pandian

 

காவிரி டெல்டாவில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கருக துவங்கியுள்ளது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
  

பி.ஆர்.பாண்டியன், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் சம்பா  மற்றும தாளடி பயிர்கள் நடவு பணிகளும், நேரடி விதைப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது.

 

களை எடுப்பு, உரமிடுகிற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிட்டத்தட்ட 10 தினங்களுக்கு மேலாக பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. இதனால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இவ்வாண்டு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவிக்க வேண்டும். அப்படி விடுவித்தால்தான் சாகுபடி பணிகளை பாதுகாக்க முடியும். தற்போது மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை வைத்து சாகுபடி பணியை முடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு தண்ணீரை திறக்காமல் தண்ணீரை காட்டியே சாகுபடி பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற மறைமுக சூழ்ச்சியில் தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.

 

கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உபரி நீரை கர்நாடக விடுவித்த அளவை ஏற்றுக் கொண்டு அதை மட்டுமே கணக்கில் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வதை  ஏற்க இயலாது. இது ஒரு சடங்கு கூட்டமாக நடைபெறுகிறது.

 

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரின் அளவை கணக்கில் கொண்டு கர்நாடக அணைகளில் தண்ணீர் அளவையும் நேரில் பார்வையிட்டு கணக்கில் கொண்டு மாதாந்திர அடிப்படையில் நமக்கு தரவேண்டிய உரிய தண்ணீரை பெற்றுக் கொடுத்தால் தான் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் பயிர் கருகுவதை பார்த்து மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைதான் கணக்கிட முடியும்.

 

எனவே உடனடியாக தண்ணீரை பெற்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு உடனடித் தேவையாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி  மேட்டூரில் இருந்து காவிரியில் தண்ணீர் விடுவித்து அனைத்து பகுதிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை கொண்டு சென்று கருகும் பயிரை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்” என்றார்.

 

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் செந்தில்குமார் கடலூர் மாவட்ட துணை செயலாளர் மணிகொல்லை ராமச்சந்திரன், மணிகொல்லை ஊராட்சி தலைவர் சுதர்சன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்