திருச்சி மாவட்டம், தண்டலை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் பெரியசாமி(40).இவருக்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெரியசாமி மற்றும் அவரது பிள்ளைகள் திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். மேலும், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
அதனைத் தொடர்ந்து பெரியசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது மனைவியை, துறையூர் பகுதியில் அரசு பேருந்து நடத்துனர் பிரகாஷ் கடத்தி வைத்ததோடு, அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், காவல்துறையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர். அதனை ஏற்ற அவர் அங்கிருந்து புறப்பட்டார்.