Advertisment

“ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

publive-image

இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கல்விப் பணியாற்றிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்குச் சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 44 ஆயிரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50 ஆயிரம் ஆசிரியர்களின் இன்னல்களைத்தீர்க்கும் வகையில் திமுக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் திமுக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

publive-image

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்றுத்தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வுப் பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

teachers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe