அதிமுக ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னையில் ஆவின் நிறுவனதுக்கு டேங்கர் லாரி மூலம் பால் கொண்டுவந்த போது, திண்டிவனம் அருகே லாரி நிறுத்தப்பட்டு, பால் திருடப்பட்டு அதற்கு பதிலாக தண்ணீரை கலந்த முறைகேடு காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

Advertisment

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் தொடர்பாக டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன், அவரது மனைவி உட்பட 28 பேர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வைத்தியநாதன் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைதான பெரும்பாலானோர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். பின்பு முக்கிய குற்றவாளியான வைத்தியநாதனும் ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைத்தியநாதன் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் விசாரணைக்கு வந்தது. அப்போது முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பால் ஏதும் திருடப்படவில்லை என்றும், பாலில் எந்த ஒரு கலப்படமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு. சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கில் கூறப்பட்டுள்ள எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதால், 2014ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரணை செய்வதில் எந்த ஒரு பயனும் இல்லை எனத் தெரிவித்து 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.