Skip to main content

ஆவின் பால் பண்ணை தண்ணீரை எங்கே விடுவது? திருமணிமுத்தாற்றிலா? தளவாய்ப்பட்டி ஏரியிலா? தொடரும் சிக்கல்!!

ஆவின் பால் பண்ணையில் ஆலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்திய பிறகு சேரும் தண்ணீரை திருமணிமுத்தாற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தளவாய்ப்பட்டி ஊர் மக்களும், தளவாய்ப்பட்டி ஏரியில் கொண்டு சென்று விடப்படும் என்று ஆவின் நிர்வாகமும், ஆளுங்கட்சி எம்எல்ஏவும் கூறி வருவதால், கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

aavin issue in salem


சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் ஆவின் கூட்டுறவு பால் பண்ணை இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனைக்கும், சென்னையில் உள்ள கூட்டுறவு இணையத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பால் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்காக அன்றாடம் 5 லட்சம் லிட்டர் தண்ணீர், ஆலை தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தண்ணீர், சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர், ஆலையின் மற்றொரு பகுதியில் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்படுகிறது. இவற்றுடன் மழை நீரும் சேரும்போது, அருகில் உள்ள ரொட்டிக்காரன்வட்டம் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் பலரின் வீடுகளுக்குள் தரையைப் பிளந்து கொண்டு நீரூற்றாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் ரொட்டிக்காரன் வட்டம் கிராமத்தினர் சொல்ல முடியாத  துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

இதற்கிடையே, பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கழிவு நீர் என்ற குற்றச்சாட்டையும் தளவாய்பட்டி, ரொட்டிக்காரன்வட்டம் கிராம மக்கள் முன்வைத்தனர். நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டதாகவும் கூறினர். பெருகி வரும் நிலத்தடி நீரூற்றால் இவ்விரு கிராம மக்களும் படும் துயரங்கள் குறித்து நக்கீரன் இணைய இதழ், தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறது. கடந்த நவ. 09-12 நாளிட்ட நக்கீரன் இதழிலும், 'எடப்பாடிக்கு அரசியல் வாழ்வு! கிராமத்தினருக்கு நரகம்! ஆவின் அநியாயம்!' என்ற தலைப்பில் விரிவாக கட்டுரை எழுதியிருந்தோம்.

மேலும், தளவாய்ப்பட்டி கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நாமே சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை தரப்பரிசோதனை செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டோம். ஆய்வு செய்ததில், பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், கழிவு நீர் அல்ல என்பதும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த வரம்புக்குள்தான் தண்ணீரின் தன்மை இருப்பதும் தெரிய வந்தது.
 

aavin issue in salem


இதுகுறித்து சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''ஆவின் பால் பண்ணையில் நீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தர பரிசோதனை செய்ததில், பிஹெச் அளவு 7.78, டிஎஸ்எஸ் அளவு 12, டிடிஎஸ் 892, சிஓடி 64, பிஓடி அளவு 12.6 புள்ளிகளும் இருந்தன. இந்த சோதனை முடிவுகள் எல்லாமே எல்லாமே மாசுக்கட்டுப்பட்டு வாரியம் வரையறுத்துள்ள அளவுக்குள்தான் இருக்கிறது. அதேபோல், நிலத்தடி நீரையும் ஆய்வு செய்ததில் அதன் தன்மையும் அந்தளவுக்கு மோசமில்லை என்பது தெரிய வந்தது,'' என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கை தளவாய்ப்பட்டி மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இருக்கிறது. என்றாலும், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை, நேரடியாக திருமணிமுத்தாற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், பால் பண்ணைக்கு நிலம் கொடுத்து, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் 33 குடும்பங்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும்; ரொட்டிக்காரன் வட்டத்தில் ஆவின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பசுமை வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நவ. 21ம் தேதியன்று, அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் (சேலம் மேற்கு) தலைமையில் தளவாய்ப்பட்டி கிராம மக்கள், பால் பண்ணை அதிகாரிகள், இரும்பாலை காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட திடீர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், ஆவினில் இருந்து தளவாய்ப்பட்டி ஏரி கழுங்கு பகுதி வரை குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

aavin issue in salem


அதேநேரம், 33 குடும்பங்களுக்கு பட்டா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக நாம் எம்எல்ஏ வெங்கடாசலத்திடம் பேசினோம்.

''சார்... பால் பண்ணையில் இருப்பது கழிவு நீர் இல்லை. அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆவின் விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர். மற்றபடி அங்கு பிரச்னை எதுவும் இல்லை. பால் பண்ணையில் தேக்கப்படும் தண்ணீரை தளவாய்ப்பட்டி ரயில் ரோடு அருகே உள்ள ஓடைக்கு குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ தொகுதி நிதி, தளவாய்ப்பட்டி பஞ்சாயத்து நிதி, ஆவின் பால் நிறுவனத்திடம் இருந்து பங்களிப்பு நிதி ஆகியவை மூலம் இதற்கான பணிகள் செய்யப்படும். இது தொடர்பாக கலெக்டரிடமும் பேசி விட்டேன். 

ஆவினுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்குவது என்பது பல காலமாக நீடிக்கும் பிரச்னை. இரும்பாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். அதற்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் தீர்க்க முடியாத பட்டா பிரச்னையைப் பற்றியெல்லாம் இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. அதை பிறகு பார்க்கலாம்,'' என்கிறார் எம்எல்ஏ வெங்கடாசலம்.

இதையடுத்து நாம் ஆவின் பொது மேலாளர் விஜய் பாபுவிடம் கேட்டபோது, ''எம்எல்ஏ தலைமையில் நடந்த கூட்டம் என்பது யாரும் எதிர்பாராதது. பால் பண்ணையில் இருந்து தண்ணீர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும். ஆவின் தண்ணீரை, தளவாய்ப்பட்டி ஏரியிலா அல்லது திருமணிமுத்தாற்றிலா? எங்கு கொண்டு சேர்ப்பது என்பது இப்போது எதுவும் உறுதியாக சொல்ல முடியாது,'' என்றார். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் ஒன்றிய செயலாளர் சுந்தரம் கூறுகையில், ''ஆவின் பால் பண்ணை தண்ணீரை திருமணிமுத்தாற்றுக்குக் கொண்டு செல்வதுதான் நிரந்தர தீர்வாக அமையும். ரயில்ரோடு அருகே உள்ள ஏரி பகுதிக்கு தண்ணீரை கொண்டு சென்றால் அங்குள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்,'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...