ஆவின் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள்: சகாயம் தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

aavin

ஆவின் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கூறியுள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது,

கோவை மாவட்ட "ஆவின்" நிறுவனத்தில் கடந்த 2017 - 18ம் ஆண்டுக்கான "வரவு - செலவு கணக்குகள் தணிக்கை" நடைபெற்ற போது அதில் "ஒப்பந்தம் நீட்டிப்பு, நிர்வாக குளறுபடி, உணவுப் பொருட்கள் பராமரிப்பு குறைபாடு" உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவின் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள தகவலை தணிக்கை குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தற்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு வாங்கப்பட்ட பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்த நிலையில் இருப்பதும், குறைந்த விலையுள்ள பல இயந்திரங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவும் தமிழக அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் 19 பால் குளிரூட்டும் நிலையங்களில், 9 நிலையங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், 10 நிலையங்கள் எடை உரிமம் பெறாமலும் இயங்குவதாக தணிக்கை குழு அறிக்கை தெரிவிக்கிறது. தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் எடை உரிமம் பெறாமல் இயங்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகளைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்" என்கிற பழமொழியைப் போல் கோவை மாவட்டத்தின் ஆவின் முறைகேடுகள் அமைந்துள்ளன.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணைகளிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை களையவும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

aavin milk Scams several lakh rupees
இதையும் படியுங்கள்
Subscribe