/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jayalalitha-in_0.jpg)
வேதா இல்லத்தை அரசுடமையாக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36.9 கோடி ரூபாயை, தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி, கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை உட்பட 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.
இந்தத் தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36.9 கோடி ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருவதாகவும், கரோனா காலக்கட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, மக்கள் வரிப் பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேதா நிலைய இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கோடு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கக் கோரி, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)