Skip to main content

அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்கக் கோரி ஆலங்குடி தாலுகா அலுவலம் முற்றுகை...

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
aalangudi taluka



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில்  உள்ளது மாஞ்சன்விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமம். அங்கு சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளையும்,  உடமைகளையும் இழந்துள்ளனர்.  மேலும், இப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து நிவாரணம் கோரி மனு கொடுத்துள்ளனர். ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு வழங்க வேண்டி அரசு நிவாரணம் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட விஏஓ அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது,  நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சமாதானம் செய்து காலம் கடத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
 


இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று திங்கள் கிழமை ஆலங்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அலுவலகம் முன்பு உள்ள ஆலமரத்தடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் வருவாய் ஆய்வாளர்கள் வினோதினி, ரெங்கராஜன்,  ஆலங்குடி போலீசார்  ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக அரசு நிவாரண பொருட்கள் வழங்கவும், நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து, முறையாக அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கவும், பழுதடைந்த வீடுகளுக்கான நிவாரணத்தொகையை வங்கி கணக்குகளில் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்  என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து,  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒவ்வொரு நாளும் நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அதிகாரிகள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin announced the new taluk at thanjavur district

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், ‘தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்’ என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும் வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர் துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார். 

அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.