Advertisment

வேங்கைவயல் விவகாரம்; சமூகநீதியா?.. சாதி நீதியா?.. - ஆதவ் அர்ஜுனா

Aadhav Arjuna questions about the Vengaivayal issue

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றப்பட்ட நிலையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இருப்பினும், இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியுள்ள நிலையில், ஏன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சனம் செய்து வந்தது. இந்த நிலையில்தான் இந்த சம்பவத்தில், முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும், முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விசிக, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குவதா? என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழகக் காவல்துறை. தலித் மக்களே தங்கள் குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து அதை அவர்களே அருந்தியிருக்கிறார்கள் என்ற 'அரியக் கண்டுபிடிப்பை' இவ்வளவு நாள் கழித்து துப்பறிந்து கண்டறிந்துள்ளது காவல்துறை.

Advertisment

தலித் மக்கள் மீதான அதிகாரத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை காலம் நீளும்.. தலித் மக்களுக்கு எதிரான இந்த விசாரணை அமைப்புகளின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், தற்போது குற்றவாளிகள் என்று காவல்துறை சித்தரித்துள்ள முரளி ராஜா, முத்துகிருஷ்ணன்,சுதர்சன் ஆகிய மூவரையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தேன். மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்? இதை எவ்வாறு மனம் வந்து காவல்துறையால் குறிப்பிட முடிகிறது. புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

இந்த சம்பவத்தின் ஆணிவேராகச் சாதி ஆதிக்கம் இருப்பதையும், காவல்துறை இந்த விவகாரத்தை அப்போதே திசை திருப்பும் வேலையில் இறங்கியதையும் தெரிந்தே, மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் அவர்கள் தனியாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த மூன்று தோழர்களும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகார வர்க்கத்தை நோக்கி எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இந்த வழக்கு தலித் மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. வலியவர்களின் குரல் அம்பலத்திற்கு வராது என்பது போல இந்த எளிய மக்களின் குரலை அதிகாரம் என்கிற கயிற்றைக் கொண்டு நெறிக்கும் வேலையை காவல்துறை மேற்கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். அதிகாரவர்கத்திற்கு எதிராக அந்த அதிகாரமற்றவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியே எனது இப்போதைய தலையாய பணியாகக் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே என்னுடைய பயணம் இருக்கும். அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

CBCID vck vengaivayal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe