கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வரலாற்று நினைவை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த கிறிஸ்தவர்கள் ஆன்மீக சைவ பண்டிதரால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கழிவறை வசதியுடன் சுகாதார வளாகம் கட்டி கொடுத்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறது. 

கடந்த 170 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், சைவத்துக்கும் சேவையாற்றிய ஆன்மீக சொற்பொழிவாளர் ஆகும்.  இவரால் சிதம்பரம் மேலவீதியில் தொடங்கப்பட்ட பள்ளி தான் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி.  இந்த பள்ளிக்கு கடந்த 1912ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சில தர்மவான்கள் பள்ளிக்கு உதவி செய்வதன் மூலம் கட்டமைப்புகள் சீராக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பள்ளி குழு செயலாளராக மருத்துவர் அருள்மொழிச்செல்வன் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சார்ந்த கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கு மேல் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது பேசிய அருள்மொழிச்செல்வன் விவிலியம் (பைபிள்) என்ற கிறிஸ்தவ ஆங்கில நூலை முதன் முதலில் தமிழில், தமிழறிஞர், சைவ அறிஞர், தமிழ், ஆங்கில ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகத் தன்மை  கொண்ட ஆறுமுக நாவலர் தான் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தார்.

மொழிபெயர்க்கப்பட்ட நூல் மிகவும் சிறப்பாக உள்ளது என ஆறுமுக நாவலரை பலர் பாராட்டியுள்ளனர். இதில் உள்ள பரிசுத்த ஆவி,  தூய ஆலயம் என்ற வார்த்தைகள் திருவாசகம், திருமுறைகளில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஏற்றவாறு எடுத்து அதனை தமிழக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அதில் இணைத்துள்ளதாகவும், ஆறுமுகநாவலரால் உருவாக்கப்பட்ட  சைவபிரகாச வித்தியசாலை இன்று மேல்நிலைப்பள்ளியாக கல்வி பயிற்றுவித்து வருகிறது. இதில் கல்வி பயின்றவர்கள் அரசு, தனியார் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பணிகளில் உள்ளனர்.  என அவர் பேசியதை கேட்ட அந்த கூட்டத்தில் இருந்த கிறிஸ்தவ சமூகத்தினர். மிகவும் ஆச்சரியப்பட்டு பைபிளை ஆன்மீகவாதியான ஆறுமுகநாவர் மொழிபெயர் தாரா? இதுபோல ஒரு பள்ளி இருக்கா? என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுள்ளனர்.

Advertisment

மேலும் ஆறுமுக நாவலர் பற்றியும், இந்தப் பள்ளியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டு அதன் முழு விவரத்தையும் தெரிந்த பின்னர் இந்தப் பள்ளிக்கு நாங்கள் ஏதேனும் ஒரு உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு பள்ளியின் செயலாளர் நேரடியாக பணம் உதவி வேண்டாம் என மறுத்து பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதியுடன் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முன்னாள் ரோட்டரி ஆளுநராக பணியாற்றிய டோனி கிரேட் என்ற பெண்மணி இதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்ததாரர் மூலம் ரூ. 8 லட்சம் செலவில்  சுகாதார வளாகத்தை கட்டிகொடுத்துள்ளார்.

சுகாதார வளாகத்தினை மாணர்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்குழு தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட சுகாதார வளாகம் அமைக்க உதவி செய்த கிறிஸ்தவ நண்பர்கள், ரோட்டரி சங்க ஆளுநர் ஜோசப் சுரேஷ்குமார், பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் , ரோட்டரி சங்க நிர்வாகிகள்  கலந்துகொண்டு மாணர்களின் பயன்பாட்டுக்கு சுகாதார வளாகத்தை ஒப்படைத்தனர். இந்நிகழ்விற்கு பள்ளியின் மாணவ மாணவிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் சுகாதார வளாகம் அமைக்க உதவி செய்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 11ஆம் வகுப்பு மாணவனின் தந்தை நாமும் பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று 6 மின் விசிறிகளை வழங்கியுள்ளார்.

ஆறுமுக நாவலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை பிற மதத்தினரும், பிற நாட்டினரும் போற்றுகிறார்கள். ஆனால் வரும் சந்ததியினர் வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ளாமல், நம் சான்றோர்களின் செயல்பாடுகள் மற்றும் வரலாறுகளை சரியாக தெரிந்து கொள்ளாமல் ஆறுமுக நாவலர் யார்? என்று கேட்கும் சூழல் ஏற்படலாம்? என்ற அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். 

Advertisment