வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து; விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு!

dpi-govt-bus

தர்மபுரி அடுத்துள்ள நூல் அள்ளி கிராமத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு நகரப் பேருந்து (2 பி) இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பேருந்து இன்று (23.07.2025) வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் தேவராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த பேருந்து உழவன் கொட்டாய் என்ற இடத்திற்கு வந்தது. அப்போது திடிரெனெ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக இருந்த சீனிவாசன் என்பவரின் வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. 

இதனால் பேருந்து ஓட்டுநர் தேவராஜும், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நரசிம்மன் என்பவரின் மகள் ஆத்திகா (வயது 3) என்ற சிறுமி படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாகத் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். அதே சமயம் ஓட்டுநர் தேவராஜ்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகள் பெரும்பாலும், புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்பட்டு அதன் பிறகு கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு இது போன்று விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

dharmapuri girl child govt bus incident
இதையும் படியுங்கள்
Subscribe