புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகம் கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன் மகன் ரஞ்சித் (வயது 24). வாகன ஓட்டுநரான இவர் நேற்று (16.07.2025 - புதன் கிழமை) இரவு ஆலங்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரஞ்சித் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்தனர். முதல்கட்ட விசாரணையில் கல்லாலங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 20) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்த வாரம் ரஞ்சித்துடன் தகராறு செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து ஸ்ரீதரை போலீசார் தேடிச் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. தொடர்ந்து ஸ்ரீதரைத் தேடிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் ஸ்ரீதர் கூறும் போது, “ரஞ்சித் எங்கள் கூட்டாளி தான். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரஞ்சித் காதலித்தான். அந்தப் பெண் மீது எனக்கும் ஆசை வந்தது. ஆனால் அந்தப் பெண் ரஞ்சித்தைக் காதலிப்பதாகச் சொன்னதால் கடந்த வாரம் அந்த பெண் ஆலங்குடிக்குப் பேருந்தில் வரும் போது அந்த பேருந்தில் நாங்களும் ஏறி அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்து வந்தோம். இதை ரஞ்சித்திடம் அந்தப் பெண் சொன்னதால் ரஞ்சித் எங்களிடம் கோபமாகப் பேசினான். அவனைச் சமாதானம் செய்ய என் நண்பன் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் வெங்கடேசனும், அவன் நண்பர்களும் வந்து பேசிய போது ரஞ்சித் வெங்கடேசனை அறைந்துவிட்டான். 

இதனால் எல்லாருமே கோபமாக இருந்தோம். அதே போலப் புதன்கிழமையும் ரஞ்சித்திடம் பேசிய போது தகராறு வந்தது. அதன் பிறகு தான் நான், புதுக்கோட்டை வெங்கடேசன், மதிவாணன், வசந்தகுமார், கல்லாலங்குடி கலையரசன் ஆகியோர் ரஞ்சித்தை வெட்டத் திட்டமிட்டு டாஸ்மாக் கடை வாசலில் வைத்து வெட்டிவிட்டுத் தப்பிச் செல்லும் போது கலையரசனுக்கு ஒரு விபத்தில் காயம் ஏற்பட்டது” என்று முழுமையாகச் சொல்லி முடித்துள்ளார். இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் கலையரசனுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். காதலில் ஏற்பட்ட மோதலில் ஒரு இளைஞரின் உயிரைப் பறித்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.