பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தேனூர் கோவில்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயனார், பூரணி, புஸ்காலமிகை, கருப்பையா, மாரியம்மன்,முருகன், செல்லியம்மன் மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான திருவிழாவானது கடந்த 8 தினங்களுக்கு முன்னர் காப்பு கட்டுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. 

இதனையடுத்து தினமும் திருவிழாவை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிலையில் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று (08.07.2025) தேர்த் திருவிழா நடைபெற்ற இருந்தது. இத்தகைய சூழலில் தான் காலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் அச்சு முறிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தேர் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பகுதியான கோபுரம் போன்ற வடிவமைப்பைக் கொண்ட பகுதி, அடுத்துள்ள தேரின் மீது விழுந்தது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். 

இது தொடர்பான காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. அதன் பின்னர் தேரை சரி செய்து மீண்டும் வடம் பிடித்து இழுத்தனர். தேர்த் திருவிழாவின் போது தேரின் அலங்கார பகுதி சரிந்து விழுந்த நிகழ்வானது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமைச்சர் சிவசங்கர் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். இந்த விபத்து நடந்த பின்னர் தேரை சரிசெய்யும் பணி முடியும் வரை சிவசங்கர் அங்கேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.