சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார். தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்பெஷல் டீம் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நகையைத் திருடியதாக இளைஞர் அஜித்குமார் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி புகார் நிலுவையில் உள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் மதுரை திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2010இல் திருமங்கலம் பகுதியில் உள்ள கோப்பன்பட்டியை சேர்ந்த ராஜாங்கம், தெய்வம் வினோத்குமார் உள்ளிட்டவர்களும், நிகிதா, நிகிதாவின் தாயார் சிவகாமி, நிகிதாவின் சகோதரர் கவியரசு, கவியரசனின் மனைவி சகாதேவி, நிகிதாவின் நண்பர் பகத்சிங் என பலரும் கூட்டாகச் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர்.
அதாவது 2010இல் அப்போதைய துணை முதல்வரின் உதவியாளரை தங்களுக்குத் தெரியும் எனக் கூறி ஒருவருக்கு ஆசிரியர் பணிக்கு பணிக்கு 7 லட்ச ரூபார், மற்றொருவருக்கு வி.ஏ.ஓ. பணிக்கு 9 லட்ச ரூபாய் என மொத்தம் 16 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் கூறியபடி அரசு வேலையைப் பெற்றுத் தரவில்லை. இதன் காரணமாகப் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். ஆனால் பணத்தைத் திரும்பத் தர முடியாது எனச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 2011ஆம் ஆண்டு மே மாதம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நீகிதா மீது மோசடி புகார் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
முன்னதாக நிகிதா உண்மையிலேயே கோயிலுக்கு நிகிதா நகையைக் கொண்டு வந்திருந்தாரா?. அவரிடம் இருந்த நகைகள் எப்படிக் காணாமல் போனது?. எதன் அடிப்படையில் அவர் புகார் கொடுத்தார்?. அந்த புகார் மீது ஏன் திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. இதே போன்ற கேள்விகளை நேற்றைய விசாரணையின் போது நீதிபதிகளும் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.