
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் 13 வயது சிறுமி. இவரின் தாய், 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தையும் பிழைப்பிற்காக கோவைக்குச் சென்றுவிட்டார். போகும்போது, தன் அப்பா, அம்மாவோடு தம்பி செந்திலிடமும் மகளைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில், சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க் கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியைக் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து சித்தப்பா செந்தில் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் சொல்ல, சிறுமியை கீழே இறக்கிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது. உடனே கீரமங்கலம் போலீசாருக்கும் சிறுமியின் தந்தைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆலங்குடி டி.எஸ்.பி வடிவேல், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். தடய அறிவியல் சோதனை செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் சடலத்தை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் 13 வயது சிறுமியின் வயிற்றில் 7 மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்துள்ளது.
சிசுவை டி.என்.ஏ ஆய்வுக்காக மருத்துவக் குழுவினர் அனுப்பியுள்ளனர். சிறுமியின் கர்ப்பம் பற்றிய தகவலையடுத்து மேலும் விசாரணை செய்த நிலையில், வழக்கு விசாரனையை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் விசாரணையில், சிறுமியின் சித்தப்பா தான் இந்தக் கொலைக்கு காரணம் என கண்டறியப்பட்டது. அதையடுத்து, தலைமறைவாகியுள்ள செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். முதல்கட்டமாக, சிறுமியின் சித்தப்பா செந்தில் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.