
கிருஷ்ணகிரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அந்த மாணவி கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், காவிரிப்பட்டினத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் நேற்று முன் தினம்( 10.2.2024) அவர்களது பெற்றோர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், மாணவியின் பெற்றோர், திருமணம் செய்துகொண்ட இளைஞர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.