
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் பத்து வயது இருக்கும்போதே மூத்த நிர்வாகி என்.ஆர்.கந்தசாமி அவர்களால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் பணியாற்றிவர் தியாகி இராமு.ராமசாமி. அதன்பின்னர் காந்திகிராமத்தில் தங்கியிருந்த சமூக சேவகி சௌந்தரம் அம்மாள் அவர்களின் வழிகாட்டுதலால் மாணவர் தமிழரசு கழகத்தில் இணைந்து, அதன்பின்னர் மாணவர் காங்கிரஸ், நகர காங்கிரஸ், தாலுகா செயலாளர், மாவட்ட துணை செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது மூத்த காங்கிரஸ் நிர்வாகி தியாகி எல்.கே.பி.லகுமையா செட்டியார் உத்தரவின் பேரில் 6 பேருடன் சேர்ந்து ரயிலை மறித்து மகாத்மா காந்தியை இறங்க வைத்ததால் இன்று அந்த இடம் காந்திகிராமம் என உருவாகியது.

இது தவிர இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி அவர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து பாராட்டை பெற்ற தியாகி இராமு.ராமசாமி ஓட்டுவீட்டிற்கு கக்கன் முதல் மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, நெடுமாறன், குமரி ஆனந்தன் உட்பட பல்வேறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வந்து சென்றுள்ளனர். எளிமையாக வாழ்ந்து வரும் தியாகி இராமு.ராமசாமி மொழிப்போராட்டம், எல்லைப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களுக்கு சென்று சிறை சென்று வந்ததால் கலைஞரால் கொடுக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகளுக்கான பென்சனை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். மகன்கள் இருவரில் ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் திருப்பூரிலும் இருப்பதால் மகளின் வாடகை வீட்டில் தங்கி இருந்து வரும் தியாகி இராமு .ராமசாமி அவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக உடல்நலம் சரியில்லாததால் படுத்த படுக்கையாக உள்ளார்.
இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் கௌரவ பொறுப்பு மட்டுமின்றி தமிழக எல்லை மொழிப்போர் தியாகிகள் சங்கத்தின் தலைவராக உள்ளார். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தியாகி இராமு ராமசாமி ஒட்டு வீட்டில் குடியிருந்து வரும் போது ஏற்பட்ட கடனை அடைக்க முன்வந்த போது கூட அதை அன்பாக மறுத்தவர் தியாகி இராமு ராமசாமி. தற்போது மூன்றுமாத காலமாக படுக்கையில் கிடந்தும் திண்டுக்கல் மாவட்டம் காங்கிரஸ் கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என கண்ணீருடன் புலம்புகிறார்.

இதுகுறித்து தியாகி இராமு ராமசாமி கூறுகையில், “எனக்கு வயது 96 ஆகிறது. பத்து வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். 86 வருடங்களாக குடும்பத்தைக்கூட கவனிக்காமல் கட்சி வளர்ச்சிக்காக கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கலந்து கொண்டுள்ளேன். பல முறை சிறை சென்றுள்ளேன். தற்போது திமுக ஆட்சியில் முக.ஸ்டாலினின் பொற்கரங்கால் தமிழக எல்லை மீட்பு தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 லட்சமும் பொற்கிழியையும் பெற்றதை என்னால் மறக்க முடியாது” என்றார்.

மேலும், கடந்த 20.12.2024ம் தேதியன்று சின்னாளபட்டி அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி என் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றார். அமைச்சர் ஐ.பெரியசாமி ஒருவரால் தான் நோய்வாய்ப்பட்டிருக்கும் என்னை காப்பாற்ற முடியும். எனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர் தன்னை கை விடுவார்கள் எனத் தெரிந்தும் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இன்று வரை இருந்து வந்துள்ளேன். மாற்றுக் கட்சியான திமுகவை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் எனக்கு உதவ முன்வந்தார்” என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகிகள் என்றால் அனாதையாக விடப்படுவார்கள் என்பது இராமு. ராமசாமி அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. கட்சியை காப்பாற்றும் முன் கட்சிக்காக 86 வருடங்கள் உழைத்த தியாகி இராமு. ராமசாமியை காப்பாற்ற காங்கிரஸ் முன்வருமா? எனத் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.