Skip to main content

'அசையாத செக்கும் ஆடாதா அம்மிக்குழவியும்' கேட்பாரற்று கிடக்கும் 900 ஆண்டுகள் பழமையான சிலைகள்!

 

1

 

புதுக்கோட்டை மாவட்டம் என்பது தமிழர்களின் பண்டைய நாகரீகம், வாழ்க்கை, தொன்மையை பறைசாற்றும் வரலாற்று சான்றுகள் நிறைந்து கிடக்கும் மாவட்டம். இப்படியான இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் தான் சுமார் 900 ஆண்டுகள் பழமையான விநாயகர், லிங்கம், ஆவுடை, நந்தி சிற்பங்கள் செடிகொடிகளுக்குள் கேட்பாரற்று கிடக்கிறது.  சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு பழமையான சிற்பங்கள் கிடப்பது குறித்து சிலர் சொன்ன தகவலையடுத்து சக பத்திரிக்கை நண்பருடன் குறிப்பிட்ட இடத்திற்கு பயணித்தோம். அதாவது சேந்தன்குடி - நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் சென்று வலதுபுறமாக திரும்பினால் அங்குள்ள குளத்தின் வடக்கு கரையில் முழுமை பெறாத அதிகம் வழிபாடுகள் இல்லாத மாரியம்மன் கோயில்.

ரக


 
அதன் அருகில் நின்ற சிலரிடம் பழமையான சிவாலயம் பற்றி கேட்க அப்படி ஒன்றும் இல்லையே என்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு குளத்தின் மேல்கரை பக்கமாக ஒரு செடிகொடிகள் அடர்ந்த ஒரு பகுதியை காட்டி அங்கே 'அசையாத செக்கும் ஆடாதா அம்மிக்குழவியும்' கிடக்குதுனு சொல்லிக்கிருவாங்க என்றார் ஒரு மூதாட்டி. மேலும் ஒரே ஒரு மூதாட்டி மட்டும் அடிக்கடி வந்து சாமி கும்பிடுவாங்க. ஆனா இப்ப கொஞ்ச காலமா அவங்களும் வருவதில்லை என்றார். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போது அங்கே 3 அடி உயரத்தில் ஒரு விநாயகர் சிற்பம். கைகள், துதிக்கை, தந்தம் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.  சற்று தூரத்தில் ஒரு நந்தி கிழக்குப் பக்கம் பார்த்தபடி பாதி புதையுண்ட நிலையிலும் அதற்கு நேர் மேற்கே சில அடி தூரத்தில் சாய்ந்து கிடந்த ஆவுடையும் அதன் உள்ளே பாதி கழன்ற நிலையில் லிங்கமும் காணப்பட்டது. இந்த சிற்பங்கள் பல வருடங்களாக வழிபாடுகளே இல்லாமல் கிடப்பதை காணமுடிந்தது. ஆங்காங்கே செங்கல்களும் விரவிக்கிடந்ததை நம்மால் காண முடிந்தது.

 

ரதக

 

இந்த சிற்பங்களின் படங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் நிறுவனர் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டனுக்கு அனுப்பினோம். இந்த சிவலிங்கத்தின் ஆவுடை தாமரை வடிவில் உள்ளது. அதே போல நந்தியில் வடிவமைப்புகளும் சோழர் கால கலைப்பாணியாக உள்ளது. மேலும் விநாயகர் சிற்பம் நம் மாவட்டத்தில் காணப்படாத சிற்பமாக வேலைப்பாடுகள் வடிவமைப்புகள் உள்ளது. அதாவது விநாயகர் சிலையின் அடிபீடத்தில் 7 விளக்குகள் காட்டப்பட்டுள்ளது. இந்த 7 விளக்குகள் என்பது 'ரோமாபுரியின்  ஆர்க் டைடஸ்' போன்று உள்ளது என்றும் சிற்பங்களின் கலைப்பாணி கி.பி 11 ம் நூற்றாண்டின் கடைசி பகுதியாகவும் கி.பி. 12 ம் நூற்றாண்டின் தொடக்கம் போல உள்ளது.  

 

ரக

 

இந்த நகரம் என்பது சேந்தன்குடி பாழையப்பட்டு ஜெமின் காலத்தில் பிற்காலத்தில் இருந்தாலும் இதுவும் பழைய தஞ்சை பகுதியை சேர்ந்தது தான் என்பதால் இது சோழர்கள் காலம் தான் என்று கணக்கிட முடிகிறது.  இங்கு பெரிய சிவாலயம் இருந்து காலப்போக்கில் அழிந்திருக்கலாம் அதன் பிறகு இந்த சிலைகள் மட்டும் எஞ்சியிருக்கிறது. மக்களும் வழிபாடுகள் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டதால் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது என்றார். 900 ஆண்டுகள் பழமையான அற்புதமான சிற்பங்கள் கேட்பாரற்று கிடப்பதை அரசு மீட்டு வழிபாட்டுக்கு கொண்டு வந்தால் தமிழர்களின் பழமையான பண்பாடு, கலை, கலாச்சாரத்தை வெளிக்கொண்டு வரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.