Skip to main content

‘90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்’ - வானிலை மையம் எச்சரிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

‘90 to 100 km. Wind will blow at high speed'- Meteorological Center warns

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். அதன் பின்னர் தீவிரப் புயலாக மாறி டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும். இவ்வாறு கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த புயலின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, அக்கரை கடற்கரை, புளூ கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல்; ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் நிவாரணம்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Miqjam storm Relief soon for those who do not have a ration card

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3, 4-ஆம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு விரைவில் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.