9 people arrested in Salem AIADMK executive Shanmugam case

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவராக இருந்துள்ளார். தற்போது, இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல்துறைக்குதகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிமுகவினர் அந்தப் பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி துடித்து கண்ணீர் விட்டனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் இவர், சந்துக்கடை வியாபாரம் குறித்தும் லாட்டரி விற்பனை குறித்தும் போலீசாருக்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், சண்முகம் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி எனச் சொல்லப்படும் சதீஷ், அருண்குமார், முருகன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்.. திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாகச் சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.