9 helicopters have been engaged in the rescue operation Chief Secretary informs

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

அதே சமயம் தூத்துக்குடியில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடக் கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அமைச்சர் எ.வ. வேலுவும், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிக்கு அமைச்சர் பி. மூர்த்தியும், தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அமைச்சர் கே.என். நேருவும், அதே சமயம் தூத்துக்குடியின் இதர பகுதிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கனமழை காரணமாகத்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் கடுமையாக வெள்ளம் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 1350 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 375 மாநிலப் பேரிடர் மீட்பு வீரர்களும், 850 தேசியப் பேரிடர் மீட்பு வீரர்களும், பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 580 காவலர்கள், இந்திய கடலோர காவல் படையினர், கப்பற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இதுவரை சுமார் 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

9 helicopters have been engaged in the rescue operation Chief Secretary informs

இதுவரை 160 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 17 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டத்திற்கு படகு மூலம் செல்ல முடியவில்லை. அதனால்9 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இருந்து 326 படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் வடிந்ததும் மின் இணைப்பு சீர் செய்யப்படும். மின் விநியோகம் செய்தால் மின்சார பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மின்தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடியும்போது படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும். தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு உரியநிவாரணம் வழங்கப்படும். தென் மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. வானிலை மையம் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சார்பில் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் கணிப்பை விடக் கூடுதலாக மழை பெய்துவிட்டது” எனத் தெரிவித்தார்.