Advertisment

 9 Ancient Metal Sami Idols Found While Digging a Pit Near Kattumannarkoil

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி அருகே உள்ளது திருநாரையூர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த உத்திராபதி என்பவருக்குச் சொந்தமான இடத்தில்புதிய வீடு கட்டுவதற்கு சனிக்கிழமை அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடப்பாரையால் நோண்டும் போது டங் என்ற சத்தம் கேட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து அஸ்திவாரம் தோண்டும் பணியில் இருந்த வள்ளல் என்பவர் இது குறித்து வீட்டு உரிமையாளர் உத்திராபதியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் அப்படியே இருக்கட்டும் எனக் கூறி அஸ்திவாரம் தோண்டும் தொழிலாளர்களை மாற்று வேலை செய்யச் சொல்லிவிட்டு மாலை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்கு வந்த தொழிலாளர் வள்ளல், அந்த இடம் தோண்டப்பட்டு இருப்பதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்து கிராம உதவியாளருக்குத்தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்தகாட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சீனுவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி, ஊராட்சி மன்றத்தலைவர் வாசுகி சோழன்ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, உரிமையாளர் உத்திராபதி வீட்டிற்குள் பார்த்தபோது பழங்கால வெண்கல சாமி சிலைகள் 6 இருந்தது. சம்பவ இடத்துக்குகடலூர் எஸ்பி ராஜாராம் தலைமையில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமார், குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீஸார் சிலையை மீட்டனர். இதுகுறித்துபோலீஸார் உத்தராபதியிடம் விசாரணை நடத்தியதில், நேற்று அதிகாலையில் எழுந்து பள்ளம் தோண்டி அதில் இருந்த 6 சாமி சிலைகளை எடுத்து மறைந்து வைத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டினர் அதில் மேலும் 3 சிலைகள் கிடைத்துள்ளது.

இதில் கைப்பற்றப்பட்ட சிலையில் பீடத்துடன் உள்ளசிவன் பார்வதி, இடம்புரி விநாயகர், நடராஜர் ஆடிப்பூர அம்மாள், சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன், திரிபூரநாதர்(சிவன்), சண்டீஸ்வரர், திருஞானசம்பந்தர் ஆகிய சாமி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளை எடுத்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையான சிலைகள் என்று கூறப்படுகிறது.