ADVERTISEMENT

டாஸ்மாக்கில் காணாமல்போன 83 ஆயிரம் ரூபாய்... அதிமுக மாவட்ட செயலாளர் கையாடல்!!!

07:09 PM Jun 25, 2019 | kamalkumar

திருவண்ணாமலை, காமராஜர் சிலை அருகில் டாஸ்மாக் உள்ளது. பல விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையில் தினசரி விற்பனை 5 லட்சத்துக்கும் மேல். சரக்கு மீதான கூடுதல் விலை வைத்து விற்பதன் மூலம் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தனியாக இங்கு பணியாற்றும் சூப்பர்வைஸர் மற்றும் விற்பனையாளர்க்கு கிடைக்கும். அதனால் இங்கு பணியாற்ற பலருக்கும் போட்டா போட்டி.

ADVERTISEMENT


இந்த கடையின் சூப்பர்வைஸராக இருப்பவர் அடி அண்ணாமலை சங்கர். இந்த கடையின் வருமானத்தை கேள்விப்பட்ட தானிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண் – 9350) பணியாற்றும் ஆளும்கட்சியான அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவின் மா.செ. தனபால், எனக்கு காமராஜர் சிலை கடையில் சூப்பர்வைஸர் பணி மாறுதல் வேண்டும் என மாவட்ட அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை சந்தித்து கடிதம் வாங்கிவந்து மாவட்ட டாஸ்மாக் பிரிவு அதிகாரிகளிடம் தந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த கடையில் பணியாற்றும் அடி அண்ணாமலை சங்கர், நானும் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவன்தான் என தன் பங்குக்கு அதிமுக பிரமுகர்களை சந்தித்து தன்னை மாற்றக்கூடாது என கோரிக்கைவைக்க அவர்களும் அதிகாரிகளுக்கு பிரஷர் தந்ததால் அதிகாரிகள் முடிவு எடுக்காமல் இருந்தனர்.

பஞ்சாயத்து அமைச்சரிடமே சென்றது அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த கடையில் 15 நாள் சங்கரும், அடுத்த 15 நாள் தனபாலும் சூப்பர்வைஸர் பணியை கவனிப்பது என முடிவானது. இதெல்லாம் வாய்மொழி உத்தரவு, அதன்படி நடக்கவும் தொடங்கினார்கள். கடந்த 15ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு எந்த பாக்கியுமில்லை, இருப்பு சரியாக உள்ளது எனச்சொல்லி கையெழுத்து வாங்கிக்கொண்டு அடுத்த 15 நாளுக்கான பொறுப்பை தனபாலிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் சங்கர்.

ADVERTISEMENT

கடந்த 19ந்தேதி அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தபோது, 83 ஆயிரம் ரூபாய்க்கான சரக்குமில்லை, பணமும் கல்லாவில் இல்லை, ஆனால் பில் போடப்பட்டிருந்தது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யும் விவகாரம் வெளியில் இருந்த தனபாலுக்கு சொல்லப்பட அவர் வந்து தனது பாக்கெட்டில் இருந்து 50 ஆயிரத்தை எடுத்து தந்துள்ளார். விற்பனையாளர்கள் தங்கள் பங்குக்கு 33 ஆயிரத்தை வெளியே புரட்டி கொண்டு வந்து ஒரு மணி நேரத்தில் கட்டியுள்ளனர். ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுள்ளனர்.

அன்று மாலையே மாதந்திர ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போதும் அதே 83 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. அதாவது காலையில் செலுத்திய பணத்தை மீண்டும் அவர்கள் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இந்த முறை அதிகாரிகள் அதுப்பற்றி குறிப்பு எழுதிவிட்டு சென்றுள்ளனர். நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயன்றபோது, தனபால் அமைச்சரிடம் முறையிட்டுள்ளார். அமைச்சர் தரப்பில் இருந்து, மாவட்ட மேலாளர் புஷ்பலதாவிடம் பேச, நடந்ததை கூறி தணிக்கை டீம் ஆய்வு நடத்தி, அதனை புகாராக பதிவு செய்துவிட்டார்கள். நாங்க ஒன்னும் செய்ய முடியாது எனச்சொல்லியுள்ளார்கள்.

பணம் குறைந்ததால் தனபாலுக்கு மெமோ தந்துள்ளார்கள் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள். அதனை அவர் வாங்காமல் போக்குகாட்டிக்கொண்டு இருப்பவர், என் மீது நடவடிக்கை எடுத்தீங்க, நீங்க யாரும் இங்கே வேலை செய்ய முடியாது என நேரடியாக மிரட்ட அதிகாரிகள் கமுக்கமாகவுள்ளனர்.

அதிமுக தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவின் மா.செ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திமுகவின் தொ.மு.ச. தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு மாவட்ட தலைவர் நளா. ஆறுமுகம் அதிகாரிகளிடம் ரெக்கமண்ட் செய்துள்ளார்.

​ஒரு சாதாரண விற்பனையாளர், சூப்பர்வைஸர் சின்னதா தப்பு செய்தால் சஸ்பென்ட் செய்யும் அதிகாரிகள், கையாடல் நடந்து அதிகாரிகளின் ஆய்வில் இரண்டு முறை அது உறுதியாகியும் நடவடிக்கை எடுக்காமல் திருடனுக்கு துணை போய்க்கொண்டுள்ளார்கள் என்கிறார்கள் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT