800 tobacco syringe seized in Thoothukudi, two arrested

தூத்துக்குடியில் மீனவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை சாக்லேட்டுகள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு வெளிவந்த நிலையில், போதை பொருள் புழக்கத்தைத் தடுக்க தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. மதன் தலைமையில் தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன், எஸ்.ஐ. முத்துராஜா உள்ளிட்ட போலீசார் தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நேற்று (ஜூன் 11) மாலையில் சந்தேகப்படும்படியான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மெடிக்கல் ரெப் தோற்றத்தில் டிப் டாப்பாக பைக்கில் வந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களின் பையை போலீசார் சோதனை செய்த போது, 800 போதை ஊசிகள் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

Advertisment

800 tobacco syringe seized in Thoothukudi, two arrested

பிடிபட்டவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 800 போதை ஊசிகளையும், பைக்கையும், 11 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தி தாளமுத்து நகர் சமர் வியாஸ் நகரைச் சேர்ந்த மாடசாமி செல்வகுமார்(45), திரேஸ்புரத்தை சேர்ந்த முகமது ரஹீம்(48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியிலிருந்து போதை ஊசி மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்து மீனவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் கல்லா கட்டியிருப்பதும், இதில் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து மாடசாமி செல்வகுமார், முகமது ரஹீம் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட் இல்லாமல் சட்டவிரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மெடிக்கல் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 800 போதை ஊசிகள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி